2007இல் இடம்பெற்ற பெண் கொலைக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் 2007ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வியாழக்கிழமை (01/10) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் இணைந்த பேக்கரிக்குள் 2007 டிசம்பர் 25ஆம் திகதி குற்றவாளி அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த அவரது மனைவி நாகமுத்து பிறேமாவதியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணையின்போது அரச தரப்பில் சட்டவாதிகளான எஸ்.அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

விசாரணைகளின் முடிவில் குறித்த நபர் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, பேக்கரிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், நாகமுத்து பிறேமாவதியைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனையும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Share this Article
Leave a comment