சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க அவர்கள் இன்று (04/08) புகழ்பெற்ற சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு கள விஜயம் மேற்கொண்டார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் இணைந்து அப்பகுதியின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, எதிர்கால அபிவிருத்திக்கான தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சாட்டி வெள்ளைக் கடற்கரை, யாழ்ப்பாணத்தின் இயற்கை எழில் மிளிரும் அரிய கடற்கரைகளில் ஒன்றாகும். பளிச்சென்ற வெண்மணல் பரப்பு, நீலக்கடலின் அமைதி, தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் கண்கவர் சூரிய அஸ்தமனக் காட்சிகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தனிச்சிறப்புகளாக விளங்குகின்றன. இயற்கை அழகையும், சுற்றுச்சூழல் வளத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டுள்ள இக்கடற்கரை, வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா வளங்களில் ஒன்றாக மாறும் திறன் பெற்றுள்ளது.
இந்த இயற்கைச் செல்வத்தை பாதுகாத்து, தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான உள்கட்டமைப்புகள் மற்றும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சாட்டி வெள்ளைக் கடற்கரையை சர்வதேசத் தரத்திலான சுற்றுலாத் தலமாக உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதுடன் வடக்கின் சுற்றுலாத்துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சிகள் விரைவில் நடைமுறை வடிவம் பெறும் என நம்பிக்கை வெளயிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், எஸ். பவானந்தராஜா, ஜெ. றஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத் தலைவர் ஜெ. விவேகானந்தன் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.