வடமாகாண சுற்றுலா பணியகத் தலைவரை தடுத்து நிறுத்திய புங்குடுதீவு கடற்படை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியக தலைவரும் அதிகாரிகளும் புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தில் அமைந்துள்ள கழுதைப்பிட்டி இறங்குதுறையை பார்வையிடுவதற்கு சென்றபோது   குறித்த இறங்குதுறைக்கு செல்லமுடியாது என்று அப்பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமில் உள்ளவர்களால் சுமார் 15 நிமிடங்கள் வரை தடுக்கப்பட்டதோடு புகைப்பட கருவிகள் மற்றும் தொலைபேசிகளில் இறங்குதுறையை காட்சிப்படுத்துவதனையும் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா பணியக தலைவர்  கடற்படை உயரதிகாரி ஒருவருடன் சம்பவ இடத்திலிருந்து தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டமையினைத் தொடர்ந்து பார்வையிடுவதற்கும், காணொளிகளை பதிவு செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த கழுதைப்பிட்டி இறங்குதுறையானது 1960 களில் நயினாதீவுக்கு கடற்போக்குவரத்து மார்க்கமாக விளங்கிய பிரதான இறங்குதுறையாகும்.

கோடை காலத்தில் குறித்த கடற்பகுதி சற்று ஆழம் குறைவாக காணப்படுவதாலேயே  நெடுந்தீவு, நயினாதீவுகளுக்கு பயணிக்கின்ற போக்குவரத்து மார்க்கமாக பின்னர் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை உருவாக்கப்பட்டிருந்தது.

குறிகாட்டுவான் இறங்குதுறையில் சனநெருக்கடி அதிகமாக காணப்படுவதால்  கழுதைப்பிட்டி இறங்குதுறையினையும் பயன்படுத்துவதன் ஊடாக  நெருக்கடியை குறைப்பது மாத்திரமல்லாமல் ஏனைய தீவுகளுக்கான சுற்றுலா பயணத்துறையினையும் வளர்ச்சியடையச்செய்ய முடியுமென்பதே குறித்த பொது அமைப்புக்களின் கருத்தாக விளங்குகின்றது.

ஒக்டோபர் தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் கழுதைப்பிட்டி இறங்குதுறையை இடையூறில்லாமல் பயன்படுத்த முடியுமென்றும் அல்லது  தற்போது உள்ளதை விடவும் சிறிதளவு ஆழமாக்கினால் ஆண்டு முழுவதும் குறித்த இறங்குதுறையினை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தீவகம் சிவில் சமூகம் உப செயலாளர் கருணாகரன் நாவலன், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ( சுவிட்சர்லாந்து ) தலைவர் சுப்பையா வடிவேலு, புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன், புங்குடுதீவு ஜே / 25 கிராம முன்னேற்ற சங்க தலைவர் நா. சண்முகம் உட்பட பலரும் சென்றிருந்தனர்

Share this Article
Leave a comment