லீசிங் தவணை செலுத்தத் தவறினால் வன்முறை மூலமாகப் பறிப்பதா – சஜித் கேள்வி!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நாட்டு மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தவும், சொத்து அல்லது வாகனமொன்றை வாங்க லீசிங் மற்றும் கடன் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. லீசிங் அல்லது கடன் பெற்றால் அதனை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும். 

அவ்வாறு செலுத்தத் தவறினால் சட்டக் கட்டமைப்பினூடாக நீதிமன்றத்திலிருந்து தடை உத்தரவு பெற்றுப் பணத்தை அறவிடக்கூடிய சட்டங்கள் நாட்டில் இருந்தபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் ‘கோணி பில்லா’ கொள்கையின் மூலம் பலவந்தமாகவும், வன்முறைகளைப் பிரயோகித்தும் தமக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிக்கும் செயற்பாடொன்று நாட்டில் நடைமுறையில் காணப்படுகின்றன.

 கடந்த காலத்தில் இதற்கு எதிராகக் குரல்கொடுத்து RTN 213 இணக்கப்பாடு ஊடாகப் பொலிஸார், இந்த ‘முகவர்களின்’ பலவந்தமான வாகனப் பறிப்பை நிறுத்தினர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை (01/10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்க சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது மீண்டும் இந்த வஞ்சகச் செயலை ‘முகவர்கள்’ ஆரம்பித்துள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு இதற்குப் பதிலளித்திருப்பதாக தெரியவில்லை. மத்திய வங்கி கூட நிதி நிறுவனங்கள் இவ்வாறு பலவந்தமாகவும் வன்முறைசார்ந்தும் ‘முகவர்களை’ பயன்படுத்திச் சொத்துக்களைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தவில்லை.

2000 ஆம் ஆண்டின் 56 இலக்கக் குத்தகை மற்றும் நிதியியல் சட்டத்தின் ஊடாக இதனைச் சட்டப்பூர்வமாகச் செய்ய முடியும் என மூன்று சட்டக் கருவிகள் காணப்படும் போது, சட்டத்தை மீறிச் சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அனுமதி வழங்குவது சட்டவிரோதமான செயலாகும். இதற்குப் பொலிஸாரும் கூட அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டு மக்கள் 12 இலட்ச ரூபாவிற்கு விட்ஸ் ரக கார் ஒன்றை வாங்கும் எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், இந்த விட்ஸ் ரக கார் கனவு கூட கானல் நீராக போய்விட்ட இந்தக் கணத்தில், லீசிங் மூலம் வாகனம் ஒன்றை வாங்கிய போதிலும் சிரமங்கள் காரணமாகச் சில தவணைகளைச் செலுத்த முடியாமல் போகும் போது, ‘முகவர்களை’ ஏவிவிட்டு நடுரோட்டில் வாகனங்களை பறித்துச் செல்லும் வெட்கக்கேடான செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். கடன் பெற்றால் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

கடன் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தால் கடன் இணக்கப்பாட்டை மீளமைக்கக்கூட வாய்ப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் காணப்படத்தக்க வாகனங்களைப் பறித்துச் செல்லும் ‘கோணிபில்லா’ முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இத்தகைய கொள்ளைக்கார ‘முகவர்’ முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். கடன் செலுத்த முடியாது போனால் முறையான பொறிமுறை ஊடாக நியாயமான முறையில் குறித்த கடனை அறவிட வேண்டும். இங்குப் பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. மக்கள் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக ‘முகவர்கள்’ பக்கத்தை பொலிஸார் சார்ந்து நிற்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment