காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டத்தில் கைகலப்பு!- 7 பேர் சிகிச்சையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (ஒக்ரோபர் 27) இச் சம்பவம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன், அதில் இருந்த ஒரு பகுதியினர் வெளியேறியிருந்தனர்.

வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

பின்னர், இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வராது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி, செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சரோஜினிதேவி, சிவாநந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா, பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரை பொலிசாரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article