நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, நேற்று முன்தினம் புதன்கிழமை (24.06) நடைபெற்றது. இதன்போது சந்தேகத்திற்கிடமான ஆறு பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அந்த சோதனையில், 500 பொட்டலங்கள் வெளிநாட்டு சிகரெட்டுகள், 2,295 பொட்டலங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், 2,569 பொட்டலங்கள் மருத்துவ களிம்புகள், 165 பொட்டலங்கள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 64 போத்தல்கள் வாசனைத் திரவியங்கள் ஆகியவை சட்டவிரோத இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல் மார்க்கம் ஊடாக இடம்பெறும் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு, ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.