2026 இல் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையக்கூடும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளிட்ட மொத்த அரச வருமானம் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும், அது 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஒருமுறை மாத்திரம் கிடைக்கக்கூடிய வரி வருமானம் கணிசமாக அதிகரித்திருந்தது. தற்போது அந்த வருமானச் சேகரிப்பு வழமைக்குத் திரும்பியுள்ளமையே இந்த வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில், நாட்டின் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த மட்டங்களில் ஒன்றாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கைகள் மற்றும் வருமான நிர்வாகச் சீர்திருத்தங்கள் காரணமாக வரி வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வரி ஏய்ப்புகள் மற்றும் இழப்புக்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் காரணமாக, எதிர்காலத்தில் அரச வருமான இலக்குகளைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக அமையலாம் என நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.

Share this Article