வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றன.

இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த வெள்ளி (13/02) இடம்பெற்ற வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னிமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே  சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் வெடுக்குநாறி மலை உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பூசைவழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அங்கு சிவராத்திரிதின கலைநிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

மேலும் குறித்த சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறும்போது வெடுக்குநாறிமலை ஆலயச்சூழலில் பொலிசார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

Share this Article