விலை அதிகரிப்பின்மை காரணமாக உயர்ந்த மதுப் பயன்பாடு

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மதுசாரப் பொருட்களின் விலைகள் முறையாக அதிகரிக்கப்படாததால், பொதுமக்கள் மத்தியில் அவற்றை எளிதில் கொள்வனவு செய்யும் நிலை உருவாகி, அதன் காரணமாக மதுப் பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணவீக்கம் மற்றும் மக்களின் வருமான உயர்வுக்கு ஏற்ப மதுசார வரிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததே இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மதுசார உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக சில மதுவகைகளின் உற்பத்தி 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மதுவரி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மது விற்பனை 8.3 மில்லியன் லீட்டர் அளவிற்கு குறைந்திருந்தாலும், அரசாங்கத்தின் வருமானம் 11.6 பில்லியன் ரூபாவால் உயர்ந்திருந்தது. அதேபோன்று, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி உயர்வினாலும் விற்பனை குறைந்த நிலையில், வரி வருவாய் 42.15 பில்லியன் ரூபா வரை அதிகரித்திருந்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், மதுவரி உயர்வு என்பது மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்கும் ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருப்பது தெளிவாகிறது.

மேலும், மதுப் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க அரசாங்கம் செலவிடும் தொகை, மதுவரி மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக உள்ளமை கவலைக்குரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, மதுவரி மூலம் அரசாங்கத்திற்கு 165.2 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தாலும், அதன் பாதிப்புகளை சமாளிக்க சுமார் 237 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் பணவீக்கம் மற்றும் மக்களின் வருமான மாற்றங்களை கருத்தில் கொண்டு, மதுசார வரிகளை காலத்திற்கேற்ப திருத்துவது அவசியம் எனவும், மதுசாரப் பொருட்களுக்கு வழங்கப்படும் மறைமுக விலைச்சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை சட்டரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அந்த மையம் வலியுறுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, சரியான வரி மற்றும் விலை கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமே மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, நாட்டின் சுகாதார மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article