வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை ஞாயிற்றுக்கிழமை (11/10) பகல் வேளையில் குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலைக்கு’ உயர்வடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உடலில் உணரப்படும் இந்தக் வெப்ப நிலைமையானது, ஈரப்பதம் மற்றும் உயர்ந்தபட்ச வெப்பநிலை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதும், வெளியிடங்களில் வேலைகளில் ஈடுபடுவதும் உடலுக்கு சோர்வை ஏற்படுத்துவதுடன், வெளியே வெயிலை எதிர்கொள்ளும் விதமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அதிகமாக நீர் அருந்துவதும் அதிக நீர்த்தன்மையை உடலுக்கு அளிப்பதும் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வதும் அவசியம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்