மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது – டில்வின் சில்வா!.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலைமை காரணமாகவே இவ்வாறு நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறியுள்ள அவர், அடுத்த ஆண்டே இத்தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று ஆங்கில பத்திரிகைக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.-

2017 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைகள் செயலிழந்து கிடக்கின்றன. தேசிய மக்கள் சகதியின் தேர்தல் அறிக்கை பிரதேச அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

ஆனால், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய சட்டம் காரணமாக எழுந்துள்ள சட்டத் தடையால், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கடினமாக உள்ளது.

2017 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் (திருத்தம்) சட்டம் எண் 17, கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையை அறிமுகப்படுத்தியது.

50% பேர் வட்டாரங்களிலிருந்தும், 50% பேர் விகிதாசாரப் பட்டியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதற்கான அறிக்கையை எல்லை நிர்ணய ஆணைக்குழு தயாரித்து 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.

கட்சிகளுக்கிடையிலான அரசியல் உடன்பாடு இல்லாததால் அது ஒப்புதல் பெறவில்லை.

புதிய முறைமையின் கீழான எல்லை நிர்ணயம் சட்ட ரீதியாக சவாலாகவும், நேரம் எடுப்பதாகவும் இருந்தால், தேர்தல்களை நடத்துவதற்குப் பழைய தேர்தல் முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இதற்கிடையில், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share this Article
Leave a comment