யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மற்றும் யாழ். போதனா மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இக்காய்ச்சலின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதன் மூலம் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனால், தற்போது இக்காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகள் மற்றும் தடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி போன்ற பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவியுள்ளதால், ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நோய்க்கு சிகிச்சை வழங்க தேவையான மருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி சுகாதார வைத்திய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக இந்த தகவல் பொதுமக்களுக்கு பரவப்படுத்தப்படுகிறது.
எலிக்காய்ச்சல் ஏற்படக்கூடிய அதிக ஆபத்து உள்ள விவசாயிகள், மீனவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்புமருந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாய திணைக்களத்துடன் இணைந்து கிராமங்களில் விவசாயிகளுக்கு தடுப்புமருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வந்து வைத்தியசாலைகள் மற்றும் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும், சிகிச்சைக்காக தேவையான மருந்துகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.