பௌத்த பிக்கு ஒருவரது துறவற ஆடையைக் களைவதற்கு யாருக்கும் உரிமையும் இல்லை – சஜித்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பௌத்த சாசனத்திற்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள முதன்மை இடத்தை பாதுகாக்கும் வகையில், தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் உடனடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், பௌத்த பிக்கு ஒருவரது துறவற ஆடையைக் களைவதற்கு யாருக்கும் எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கம்புருபிட்டிய ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, ஓமாரே கஸ்ஸப அநுநாயக்க தேரரைச் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நமது நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களை நம்ப முடியவில்லை. அரசியலமைப்பின் மூலம் புத்த சாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இன்று முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

எனவே, அரசியலமைப்பில் உள்ள சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்.

பௌத்த மதத்தைப் போலவே ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும். காவி ஆடைக்கு அனைவரும் கரங்கூப்பி மரியாதை செலுத்த வேண்டும்.

எந்தவொரு பிரச்சினை எழுந்தாலும், இரண்டு வாரங்கள் கழித்து குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்துவதை விட, 24 மணி நேரத்திற்குள் தகவல்களைக் கண்டறிய வேண்டும்.

மதத் தலைவர்களின் ஆடைகள் மற்றும் பிற உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், காவி ஆடையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் விதிகள் மாற்றப்பட வேண்டும்.

மேலும், காவி ஆடையைக் களைகின்ற செயல் மிகவும் கொடூரமானது. அதற்கு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியாகச் செய்யக்கூடிய அனைத்து அழுத்தங்களையும் எமது கட்சி வழங்கும் என்றார்.

Share this Article
Leave a comment