பல்கலைக்கழக விடுதியில் ஊர்காவற்துறை மாணவன் விபரீத முடிவு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16 ஜூன்) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16 ஜூன்) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது இதனை கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவர் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது. இச் சடலத்தின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Article