நெடுந்தீவு பிரதேசத்தில் மதுபான நிலையம் ஒன்றினை அமைத்தமை தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்ஒன்று இன்றைய தினம் (ஏப்ரல் 15) நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள புனிதயுவானியார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றுக்கு மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கான அனுமதி வழங்கப்பட்டு விற்பனை இடம்பெறுவதால் அதன்காரணமாக நெடுந்தீவில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான மற்றும் உடல்நல ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பொது அமைப்புகள் தங்கள் கருத்துக்களை இதன்போது வெளிப்படுத்தியிருந்தனர்.
நெடுந்தீவு பங்கு தந்தை, நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் மற்றும் நெடுந்தீவில்உள்ள மகளிர் அமைப்புகள் என்பன இணைந்தே இன்றைய தினம் காலை ஒரு ஒன்றுகூடலை ஏற்படுத்தியிருந்தனர்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையம் தொடர்பாக தங்களதுகருத்துக்களை வெளிப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டோர் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி மதுபானவிற்பனை நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை பொது அமைப்புகள் இணைந்து நடத்துவதற்கு இன்றைய கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
நடத்தப்படும் பேரணி தொடர்பாக தகவல்கள் பொதுமக்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் எழுத்து மூலமான கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கலந்துரையாடலில் நெடுந்தீவு பங்கு தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் ,நெடுந்தீவில் உள்ள மகளிர்அமைப்புகளின் அங்கத்தினர்கள், ஆலயங்களின் நிர்வாகத்தினர், மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு தம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.