நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான மாலை நேரப் படகு சேவை இன்று(ஒக்ரோபர் 1) தாமதம் அடைந்ததால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவிலிருந்து மாலை 3.00 மணிக்கு புறப்பட வேண்டிய கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு புறப்படும் வேளை பழுதடைந்த காரணத்தினால் அதற்கு மாற்றுப் படகுகள் ஒழுங்குபடுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் பெரும் பிரியத்தனத்தின் பின்னர் அரச படகான வடதாரகை ஒழுங்கு செய்யப்பட்டே சேவை இடம்பெற்றது.
கடந்த நான்கு நாட்கள் விடுமுறை தினமாகையால் நெடுந்தீவில் இருந்து சென்று பல இடங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் , சுற்றுலா பயணிகள் போன்றோர் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிய வருகிறது.
இதேவேளை சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அரச படகான குமுதினி மற்றும் வடதாரகை என்பன சேவையில் ஈடுபடுத்தப்படாமையினால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் சீரான ஒரு ஒழுங்கமைப்பில் படகு சேவையை மேற்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது விடயமாக தனியார் படகு உரிமையாளர்களுடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு அரச படகுகள் சேவையில் ஈடுபடாத வேளைகளில் மாற்று ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு இலகுவான பயணத்திற்கு சரியான படகு சேவையினை உருவாக்குவதற்கு வழிசமைக்க வேண்டும் என நெடுந்தீவு மக்கள் காலங்காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.