நெடுந்தீவு கடல் போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

யாழ்ப்பாணம், குறிக்காட்டுவான் – நெடுந்தீவு கடல் போக்குவரத்தில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நெடுந்தீவு மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக விளங்கும் குறிக்காட்டுவான் – நெடுந்தீவு கடல் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் உரிய பராமரிப்பின்றி அடிக்கடி பழுதடைவதாகவும், மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் முழுமையானதாக இல்லாததால் சில நாட்களிலேயே மீண்டும் பழுதுகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நாளாந்தம் கடல் போக்குவரத்தை நம்பியிருக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது –

நெடுந்தாரகை படகு கடந்த ஆட்சியில் மாகாண சபை நிதியில் திருத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 7 மில்லியன் ரூபா செலவில் சார்ப் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது மீண்டும் பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளது.

வடதாரகை படகு கடந்த வருடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 50 மில்லியன் ரூபா செலவில் திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அதுவும் போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குமுதினி படகு மாத்திரம் நாளொன்றுக்கு இரு தடவைகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

எனினும், அப்படகில் ஒழுக்கு காணப்படுவதால் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான சமுத்திரதேவா படகு, ஆளுநர் நிதியில் 26 இலட்சம் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் 10 இலட்சம் ரூபா நிதியுதவியும் கொண்டு தற்போது வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் 250 மில்லியன் ரூபா செலவில் புதிய படகொன்றைக் கொள்வனவு செய்து கட்டணம் அறவிட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் 350 மில்லியன் ரூபா செலவில் புதிய படகொன்றைக் கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இத்தகைய சூழலில் தற்போது ஒரேயொரு படகு மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை கவலைக்குரிய விடயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, கடமைகளுக்காக நாளாந்தம் நெடுந்தீவுக்கு சென்று வருவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

பழுதடைந்துள்ள படகுகளை உடனடியாக முழுமையாகத் திருத்துவதுடன், புதிய படகுகளைக் விரைவாகக் கொள்வனவு செய்து நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தை சுமுக நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கும் ஒத்துழைப்பை பெரிதும் மதிப்பதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Share this Article
Leave a comment