தேர்தல் நேர்மை மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் தொடர்பாக வட மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (25.11) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவையும் வட மாகாண ஊடகங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு தேர்தலும் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றது. எனினும், தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் போலிச் செய்திகள், திரிபுபடுத்தப்பட்ட இணையத்தளப் படங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் போன்றவை தேர்தல் நேர்மைக்கும் சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்கும் சவாலாக அமைந்துள்ளன.

இவ்வாறான டிஜிட்டல் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துதல், தற்போதுள்ள தேர்தல் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
மேலும், ஊடகவியலாளர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கான வரைவுகளில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, எதிர்வரும் தேர்தல்களை நீதியாகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு ஊடகத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதும் இக்கலந்துரையாடலின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்தது.