நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நிதிமன்றில் இன்று (ஜூன் 6)சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகமையில் உள்ள வீட்டில் சம்பவ தினத்தன்று தங்கியிருந்து காலையில் படகுமூலம் சொந்த இடம் சென்ற நெடுந்தீவில் கற்பிக்கும் ஆசிரியர், சம்பவதினத்தன்று காலை வீட்டில் இருந்தவர்களது தேவைக்காக இளநீர் கொண்டுசென்று வைத்தவர் மற்றும் கொலை செய்யப்பட்ட சு.மகாதேவாவினை அடையாளம் காட்டிய அவரது மகன், என்.பாலசிங்கம் அவரது மனைவி ஆகியோரை அடையாளம் காட்டிய அவரது சகோதரன் ஆகியோரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர்.
இதேவேளை வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருந்து கொலையுண்ட வேலாயுதபிள்ளை நாகரத்தினம் என்பவரின் கைப்பை மற்றும் அதனுள் இருந்த ஒருதொகை வெளிநாட்டு நாணயத்தாள் என்பன காணாமற்போயுள்ள விடயம் தொடர்பில் உறவினர்கள் மன்றில் தெரிவித்ததுடன் இதுவரை அப்பொருட்கள் கிடைக்காமையால் இச்சம்பவத்துடன் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.