நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சபரீஷ் எனும் படகு நேற்று (செப்ரெம்பர் 9) இரவு குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து நெடுந்தீவுக்கான கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்றவேளை இடைக்கடலில் இயந்திரம் பழுதடைந்த காரணத்தால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிய வருகின்றது.
பொருட்களை ஏற்றிக்கொண்டு நடுக்கடலில் சென்ற வேளை படகு இயந்திர கோளாறு காரணமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைக்காக நெடுந்தீவிலுள்ள படகுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு படகு வந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட போதும் கடும் கடற் கொந்தளிப்பு காரணமாக படகை இழுந்துச் செல்லும் நடவடிக்கை கைவிடப்பட்டதுடன் உதவிக்கு சென்ற படகும் சேதமடைந்து கரைதிரும்பியமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து நயினாதீவின் பின்புறமாக கடல்நீரோடு அடித்துச் செல்லப்பட்டு அனலைதீவுடன் உள்ள புளியந்தீவு கரையில் தரைதட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் படகில் இருந்தவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதுடன் படகு சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது நயினாதீவு படகுகளின் உதவியுடன் மீட்கப்பட்ட படகானது நயினாதீவுக்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.