தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நெடுந்தீவு பகுதியில் கடும் வரட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக கால்நடைகள் பெரும் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அங்கு காணப்படுகின்ற கால்நடைகளுக்கான கேணிகள், குளங்கள் என்பன தூர்வாரப்படாமல் இருந்த காரணத்தினால் மிகவும் சேறும் சகதியுமாக காணப்படுவதனால் நீர் ஆகாரம் இன்றி கால்நடைகள் இறந்து வருகின்றதுடன், சுற்றுலாவிகளை கவரும் குதிரைகளும் இதில் விதிவிலக்கானவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெடுந்தீவு மேற்கில் உள்ள கேணிகள் குளங்களை அங்கே கால்நடைகள் வைத்திருப்போர் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குளங்கள் , கேணிகளை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல நெடுந்தீவில் உள்ள ஏனைய பிரதேச கால்நடை உரிமையாளர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து இச் செயற்பாட்டில் இறங்கி கால்நடைகளுக்கான நீராகாரத்தை வழங்க முன்வர வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு மேற்கில் இவ்வாறான நல்லெண்ண செயற்பாடுகள் செய்து வருகின்ற இளைஞர் குழுக்களை மக்கள் பாராட்டி வருகின்றதுடன், இந்த நல்லெண்ண செயற்பாடானது நெடுந்தீவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.