ஏழு நாய்க்குட்டிகளை எரித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் தொடர்பில் நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை ஒரு மாதம் நிரம்பிய 7 நாய்க்குட்டிகளை ஒருவர் தீயில் இட்டுக் கொன்றை கோரச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், தவசிக்குளம் பிரதேசத்தில் நடந்திருந்தது.
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக, சம்பவத்தின் நேரில் கண்டவரின் தொலைபேசி இலக்கம், சந்தேகநபரின் முகவரி, பெயர் விவரம் என்பன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டதுடன், சம்பவத்தை நேரில் சென்று ஆராயவும் கடந்த திங்கட்கிழமை இரவு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டபோது, முறைப்பாடு கிடைக்கவில்லை என்றும், முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, அந்த அதிகாரியை நேரில் சென்று ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தேன். அவர் செல்லவில்லை, மீள அறிவிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.
நேற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்ணுக்கு பல தடவைகள் அழைப்பெடுத்தபோதும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பெடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வினவியபோது, இதுவரை சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.
தீவகத்தில் நாய் ஒன்றின் கால்கள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட காணொலி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியபோது, யாழ்ப்பாணம் பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்து சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர்.
ஆனால், போதிய தகவல்கள் வழங்கப்பட்டும், கொடிகாமம் பொலிஸார் நாய்க்க்குட்டிகளை எரித்தவர் மீது இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளமை விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.