தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே தவிர அரசாங்கம் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் இதி குறித்து மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்களை அறிவித்து வருகின்றார். எனினும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர், அரசாங்கத்தின் திட்டங்களை தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதற்கும் தேவையான ஆளுமையின்றிக் காணப்படுகின்றனர்.
இதேநேரம் ஒருவேளை தான் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் ஊடாகவும் தமிழ் மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அனுபவமும் ஆளுமையும் முக்கிய பங்காற்றியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தென்னிலங்கையில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தமக்கு முக்கியமான பிரச்சினையல்ல எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் தமக்குப் போதிய அரசியல் அதிகாரத்தை வழங்கினால், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தமது அரசியல் ஆளுமையின் மூலமாகவும் பல்வேறு விடயங்களைச் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தாம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளதாகவும், அதனை மீண்டும் நிரூபிக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.