எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல்மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்டஉறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை(07) கட்சியிலிருந்து விலகினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும்பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல்மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின்தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.
அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாகஎஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர்பெயரிடப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள்உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாகநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும்இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமைகட்சியிலிருந்து விலகினார்.
அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாகஅறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்குஅனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் உறுதிப்படுத்தினர்.