டிஜிட்டல் முறைமையாகும் இலங்கை சுங்கத் திணைக்களம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய ‘காகிதமல்லா சுங்கப் பிரகடன முறைமை’ இன்று வியாழக்கிழமை(01/10) தொடக்கி வைக்கப்பட்டது, இது நாட்டின் சுங்க அறிவிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதிலும் நவீனமயமாக்குவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பணியகம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறைமையானது, சுங்கச் சேவைகளை மிகவும் திறமையாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மாற்றத்தை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கும் நிகழ்வு இலங்கை சுங்க கேட்போர் கூடத்தில், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது

புதிய முறைமையின் கீழ், அனைத்து இறக்குமதியாளர்களும் பிரகடனதாரர்களும் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய சுங்கப் பிரகடனங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முந்தைய முறைமையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் சுங்கப் பிரகடனங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்த புதிய டிஜிட்டல் நடைமுறையின் முக்கிய அம்சம் என்னவென்றால், டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட பிறகு ஆவணங்களில் செய்யப்படும் எந்தவொரு மாற்றத்தையும் கண்டறியும் திறனாகும்.

இந்த அம்சமானது சுங்க அறிவிப்பு நடைமுறையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் என்றும் மோசடி மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரசின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொதுச் சேவை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காகிதமல்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகப்படுத்தப்படுகிறது

Share this Article
Leave a comment