சுகாதார ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம்  இன்று (22/07) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment