சுகாதார அமைச்சுக்கு லேப்ராஸ்கோபி இயந்திரங்கள் அன்பளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சிங்கப்பூரில் வசிக்கும் நாகுளுகமுவே சுமன நாகிமி மற்றும் கடவத்தை சரண பௌத்த பவுண்டேஷனின் தலைவர் சுனில் விஜேவர்தன கொஹிலவத்தை ஆகியோரின் நிதி உதவியில், 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நவீன லேப்ராஸ்கோபி இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

 இதற்குரிய இயந்திரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள், நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் வைத்து சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.

 இந்த நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற இரு நவீன லேப்ராஸ்கோபி இயந்திரங்களும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் ராகமை போதனா வைத்தியசாலைக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதன் மூலம் குறித்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் நவீன அறுவைச்சிகிச்சைகளுக்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 லேப்ராஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவைச்சிகிச்சைகளின் போது, பாரம்பரிய திறந்தவெளி அறுவைச்சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் உடலின் வெட்டுக்காயங்களின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.

 இதன் காரணமாக, அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவாகக் குணமடைவதுடன், கடுமையான வலியும் குறைந்து, வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டிய காலமும் கணிசமாகக் குறைகின்றது.

 நவீன அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மிகவும் எளிமையான மற்றும் திறமையான சிகிச்சைகளை வழங்குவதற்கும், வைத்தியசாலைகளின் சிகிச்சைத் திறனை அதிகரிப்பதற்கும் இந்த உபகரணங்கள் விசேட பங்களிப்பை வழங்கும் என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share this Article
Leave a comment