கைத்தொலைப்பேசிகளின் விலையை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் என சில சங்கங்கள் கூறினாலும், தற்போது அந்த விலை குறைப்பை நுகர்வோருக்கு வழங்குவது கடினமாகும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கைப்பேசிகள் மற்றும் அதுசார்ந்த உதிரிபாகங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்கவுள்ளதாக இலங்கை கைத் தொலைப்பேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக கைத் தொலைப்பேசிகள் ஆயிரத்து 400 ரூபாவுக்கு வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, வர்த்தக நிலையங்களில் ஆயிரத்து 600 ரூபாவுக்கு விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது குறித்த தொலைபேசிகள் வர்த்தக நிலையங்களுக்கு மூவாயிரத்து 800 ரூபாவுக்கு கிடைக்கப் பெறுகின்றன.
இந்தநிலையில், இன்று முதல் வர்த்தக நிலையங்களில் தொலைபேசிகளின் விலை குறைக்கப்படும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.
எனினும், வர்த்தக நிலையங்களில் முன்னர் நிலவிய விலைக்கு கொண்டு வரப்பட்ட தொலைபேசிகளே உள்ளன.
இந்தநிலையில், வர்த்தக நிலையங்களுக்கு குறைக்கப்பட்ட விலையில் தொலைபேசிகள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.