குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 15) காலை நெடுந்தீவு, மாவிலித்துறையில் உள்ள குமுதினி படுகொலை நினைவாலய வளாகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டித் திருப்பலியும், சம நேரத்தில் மாவிலித் துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபரத்தி பிள்ளையார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டிச் சிறப்புப் பூசையும் நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் குமுதினிப் படுகொலை நினைவேந்தல் குழுவின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுள் ஆரம்பமாகி நடைபெற்றன.
நினைவுத் தூபியில் முதன்மைச் சுடரில் இந்தப் படுகொலைச் சம்பவத்தில் 6 மாதக் குழந்தையைப் பறிகொடுத்த தாயான வி.அன்னலட்சுமி ஏற்றினார். நினைவுத்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பசுந்தீவு ருத்திரனின் “குருதியின் குமுறல்கள்” என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நினைவாலய வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றது.