கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முதலாகவும், தற்போது இலங்கையில் அரச வைத்தியசாலை கிளிநொச்சியில் மாத்திரமும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிகிச்சையினை இன்று (19/06) ஆரம்பித்துள்ளனர்.
நெதர்லாந்து அரசின் நிதியுதவியில அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவ மனையில் யாழ்ப்பாணம் பல்கலைகழகை மருத்துவ பீடமும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையும், இணைந்து கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பங்களிப்புடன் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையினை (IVF) இன்று ஆரம்பித்துள்ளனர்.
திருமணத்தின் பின்னர் குழந்தைகள் இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இன்றைய சூழலில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு முதற்கட்டமாக இச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடல் உள ரீதியான பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்ட தகுதியான பெண்கள் தெரிவு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக இச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் தற்போது கிளிநொச்சி மாவட்ட அரச வைத்தியசாலையில் மட்டுமே செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இன்றை இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப்பீட பீடாதிபதி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.