கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மூன்று வெளிநாட்டு வர்த்தகர்கள் நேற்று (25/05) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் நேற்று (25/05) அதிகாலை சந்தேகத்திற்கிடமான பயணிகள் மூவரைத் தடுத்து வைத்துச் சோதனை செய்த சுங்கப் பிரிவு அதிகாரிகள், அவர்களிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு உயர்ரக சிகரெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 சிகரெட் கார்ட்டூன்கள் மீட்கப்பட்டன. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,400 உயர் ரக சிகரெட்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர்கள் மூவரும் சீனப் பிரஜைகளாவதுடன், இவர்கள் சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் திசை திருப்புவதற்காக இந்த சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து ‘பாடிக் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஓ.டி.- 297 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, தாம் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளுக்குள் எவ்விதமான வரி செலுத்த வேண்டிய பொருட்களும் இல்லை எனக் கூறி, நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ வழியாகச் செல்ல முற்பட்ட போதே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சீன வர்த்தகர்களும் தற்போது சுங்கப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article
Leave a comment