வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ள நி லையில், அதிகளவான பக்தர்கள் இன்று காலை (மார்ச் 3) 6 மணி முதல் குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து கச்சதீவு நோக்கிப் பயணமாகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருவிழாவுக்கான போக்குவரத்துக்கென 30 படகுகளுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் இன்று 20 படகுகள் சேவையில் ஈடுபட்டன. குறிகாட்டுவான் இறங்குதுறையில் கச்சதீவு செல்வதற்காக பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கூடி நின்றதை அவதானிக்க முடிந்தது.
அதேவேளை, தமிழகத்தில் இருந்து இன்று மதியம்வரை 5 படகுகளில் பக்தர்கள் வந்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பல படகுகள் பக்தர்களுடன் இன்று மாலை கச்சதீவை வந்தடையும் என்று கூறப்படுகின்றது.