ஊர்காவற்றுறையில் கடந்த 10ஆம் திகதி நடந்த விபத்துச் சம்பவத்தில் படுகாயம் அடைந்திருந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி, இருவர் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியிதில் பின் இருக்கையில் இருந்து பயணித்த 69 வயதான அமர்தநாதன் யோகராசா என்பவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்தவர் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமோ மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் எதுவுமோ காணப்படாத நிலையில் அவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (ஜனவரி 5) முற்படுத்தப்பட்டுடார்.
விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஜே.கஜநிதிபாலன், அந்த நபரை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.