ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள், தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் நேற்று முந்தினம்(16/06) ஈடுபட்டார்.
வைத்தியசாலை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்த அவர், நோயாளர்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து விநியோகம் மற்றும் மனிதவளத் தேவைகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

தீவக மக்களின் பிரதான சுகாதார நிலையங்களில் ஒன்றாக விளங்கும் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் சேவைகளை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயம் ஊடாக வைத்தியசாலை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டதுடன், சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.