இலங்கையில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று – சுகாதார அதிகாரி தகவல்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நாட்டில் வருடாந்தம் எச்ஐவி தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மாத்திரம் 875 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்தார்.

அத்தோடு, போதைப்பொருள் பயன்பாடும் அதனோடு இணைந்த ஊசி பயன்பாடும் சமூகத்தில் நவநாகரிக போக்காக உருவெடுத்துள்ளமையால், அதன்பால் ஈர்க்கப்பட்டு பலரும் எச்ஐவி, எப்படைடிஸ் சி உள்ளிட்ட பால்வினை நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘முழுநாடும் ஒன்றாக’ எனும் தேசிய செயல் திட்டத்தின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் நேற்றைய தினம் (08/10) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனையானது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், திடீர் மரணங்கள் மற்றும் பால்வினை நோய்தொற்றுகள் போன்ற ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும். உலக நாடுகள் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இலங்கையில் பாதுகாப்பற்ற பால்வினை நடவடிக்கைகள் மற்றும் நரம்புகளில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய சவால்கள் எழுந்துள்ளன.

எச்ஐவி தொற்றைக் கண்டறியும் வீதம் 56 சதவீதமாகவும், மருந்துகளைப் பாவிப்போர் வீதம் 52 சதவீதமாகவுமே உள்ளது. போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 875 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, போதைப்பொருளை ஊசி மூலம் பாவிப்பவர்களிடையே ஹெபடைடிஸ் சி தொற்று 40 முதல் 50 சதவீதம் வரை கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 41 பிரதியோக சிகிச்சை நிலையங்களின் மூலம் விசேட சேவைகள், தடுப்பு முறைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளுக்குச் செல்லத் தயங்குபவர்களுக்காகச் சமூக மட்டத்திலான மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.

பால் உறவுகளுக்காக போதைப்பொருளைப் பயன்படுத்துவோரிடையே தொற்றுப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. அன்மையில் கொம்பனித்தெரு பகுதியில் 360 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 45 பேருக்கு எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையால் சுய உணர்வற்ற நிலையில் பாதுகாப்பற்ற மற்றும் குழுப் பால் உறவுகளில் ஈடுபடுவதே இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

எனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதும், நரம்புகளில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுவதைத் தவிர்ப்பதும் அவசியமாகும். இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளால் நாட்டைப் பாதுகாப்பான சுகாதாரச் சூழலாக மாற்ற முடியும் என்றார்.

Share this Article
Leave a comment