ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நடப்பு ஆண்டில் கொள்கை சார்ந்த கடன் வசதிகளின் கீழ் பெறப்படும் நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த ஆண்டில் 380 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதில் 100 மில்லியன் டொலர்கள், நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் காலநிலை பேரழிவுகள் ஆகிய சவால்களுக்கு முகங்கொடுக்க இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

அதற்கமைய, வர்த்தக மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்துக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களுடன், மேலும் 100 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த குறிப்பிட்ட திட்டத்திற்கான மொத்த கடனுதவி 200 மில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கே அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Share this Article
Leave a comment