சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21/09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், குறித்த இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இது தொடர்பாக சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியான தலையீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் செலுத்தும் கவனத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆகியோருடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.