யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் காணொளிகளை கணினியின் ஊடாக செம்மையாக்கம் செய்து சமூக ஊடங்களில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை சந்தேகித்து குறித்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் அதிகமானோர் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, தாக்குதல்களுக்கு உள்ளான இரண்டு இளைஞர்களையும் வைத்தியசாலையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்க முற்பட்ட போது மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினரால் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, காயமடைந்த காவல்துறை உப பரிசோதகரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதானவர்களில் 25 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.