மதுபானத்தை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (09/04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்த புதிய மோட்டார் சைக்கிளை கடந்த 08ஆம் திகதி இலக்கத் தகடுகள் இன்றியும், வருமான அனுமதிப்பத்திரம் இன்றியும் செலுத்திய குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக 10,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.

அவ்வளவு பணத்தை வழங்க முடியாது என முறைப்பாட்டாளர் தெரிவித்த போது, சந்தேகநபர் மதுபானப் போத்தல் ஒன்றைக் கோரியுள்ளார்.

அதனை வழங்கும் வரை முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்பட்டிருந்த கடிதத்தை தன்வசம் வைத்துக்கொண்டு, நேற்று குறித்த மதுபானப் போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்றுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள மூடியிருந்த கட்டிடமொன்றிற்கு அண்மையில் வைத்து இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

Share this Article
Leave a comment