மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் நேற்று (08/11) மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ள காணியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
சுற்றுச்சூழல் தொடர்பான சில அறிக்கைகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தமையால், குறித்த மைதானத்தின் நிர்மாணப் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும், தற்போது தேவையான ஆவணங்கள் அனைத்தும் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும், மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் குமார கமகே மேலும் தெரிவித்துள்ளார்.