அத்தனகலு ஓயாவில் நீர் மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, திவுலபிட்டிய, மிரிகம, அட்டனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(09.11) பிற்பகல் 12.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த வெள்ள எச்சரிக்கையானது, நாளை (10.11) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா வடிநிலத்தின் மேல் மற்றும் இடைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படத் தொடங்கியுள்ளமையால், அத்தனகலு ஓயாவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆற்று நீர் மட்டத்தைக் கண்காணிக்கும் நிலையங்களில் பதிவான அளவீடுகளின் அடிப்படையில், வரும் சில மணி நேரங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்காகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.