உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்து தொடர்பாக, கடற்படை அதிகாரிகளுடன் முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (மே 03) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்தொடர்பாக, கடற்படையின் ஒத்துழைப்பினை குறிப்பாக தீவக போக்குவரத்துக்கு கடற்படையின் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டு கடல்வழி போக்குவரத்து தொடர்பாக ஆராயப்பட்டது.
அந்த வகையில் கடல்வழியா தீவகபகுதிக்கு தேர்தல் கடமைக்காக செல்லவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பயண ஒழுங்கு தொடர்பாக ஆராயப்பட்டு, குறிகட்டுவான் படகுத் துறையிலிருந்து நெடுந்தீவுக்கு வடதாரகை படகு மூலமும், நயினாதீவுக்கு தனியார் படகு மூலம் மே 05 காலை 09.00 மணிக்கும், ஊர்காவற்றுறை படகுத் துறையிலிருந்து எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கு கடற்படை படகுகள் மூலம் மே05 காலை 09.00 மணிக்கும் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன்அவர்களினால் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பான விபரங்களை முன்வைக்கப்பட்டதுடன் இக்கலந்துரையாடலில் தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச்செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர் ஆகியோரும் உடனிருந்தார்கள்.