இலங்கைக் குமரித்தமிழ்ப் பணிமன்றம் நடாத்திய அமரர் உயர்திரு வே.கதிரவேலு (அப்பு) அவர்களின் நினைவரங்க நிகழ்வும், “ஆய்வாளன்” நூல் வெளியீடும் இன்றையதினம் ( ஓகஸ்ட் 23) கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முன்னைநாள் முதல்வர் மீனலோயினி இதயசிவதாசு அவர்களின் தலைமையில் கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள கிளிநொச்சி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இன்று காலை சிறப்பாக இடம்பெற்று தற்போது நிறைவு கண்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வாக அமரர் உயர்திரு வே.கதிரவேலு (அப்பு) அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது பேர்த்தி குடும்பத்தினர் மலர்மாலை அணிவித்து நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தனர். தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களது தழித்தாய் வாழ்த்து, மற்றும் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றது.
கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் முதலவர் மா.கணபதிப்பிள்ளை அவர்கள் அமரர் உயர்திரு வே.கதிரவேலு (அப்பு) அவர்களின் நினைவுப் பேருரையினை சிறப்பாக ஆற்றியிருந்தார்.

சிறப்பு நிகழ்வாக இலங்கைக் குமரித்தமிழ்ப் பணிமன்ற நிறுவுனர் நா.வை.குமரிவேந்தன் (மகேந்திரராசா) அவர்களின் “ஆய்வாளன்” நூல் வெளியீடு இடம்பெற்றது.

வெளிடப்பட்ட நூலின் ஆய்வுரையினை கிளிநொச்சி காவேரி கலாமன்ற இயக்குனர் வண. து.சி.யோசுவா அவர்கள் மேற்கொண்டதுடன் நூல் நயப்புரையினை வடமாகாண பண்பாட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர் சி.நாகேந்திரராசா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து வைரவிழாக் கண்ட பல்தொழில்சார் மூத்த பிரஜைகள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பரிசிலும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இரு கட்டமாக சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வான கலைப்பிரிவு மாணவர்களும் விருந்தினர்களால் மெடல் அடிவிக்கப்பட்டு பரிசிலும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட உதவி அரச அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் கரைச்சி பிரதேச உதவி செயலாளர் , வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன் ஆகியோருடன் அழைக்கப்பட்ட சமூக மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்தோருடன் சிறப்பாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
