வகத்தின் பாரம்பரியமான “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்களாக வேலணை சலஞ்சேஸ் அணி தெரிவாகியுள்ளது.
இப்போட்டி, ஆண்டுதோறும் வேலணை சலஞ்சேஸ் மற்றும் ரைற்ரன்ஸ் கழகங்களால் இணைந்து 10 பந்துப் பரிமாற்ற முறையில் நடத்தப்பட்டு வரும் முக்கியமான விளையாட்டுப் போட்டியாகும். இவ்வாண்டு போட்டி ஒகஸ்ட் 15 முதல் 17 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 24 அணிகளின் பங்கேற்புடன் வேலணை உப்புக்குழி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இறுதிப் போட்டி நேற்று (ஒகஸ்ட் 17) நடைபெற்றது. இதில் வேலணை சலஞ்சேஸ் அணி மற்றும் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்பிலிப்ஸ் அணி 9 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சலஞ்சேஸ் அணி அதே 9 பந்துப் பரிமாற்றங்களில் 6 விக்கெட்டுகளை இழந்தும் இலக்கைத் தாண்டி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிநிகழ்வில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச சபையின் பகுதி பிரதேச செயலர் க. பார்த்தீபன், தலைவர் சி. அசோக்குமார், உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், கிராம உத்தியோகத்தர்கள் பா. தனுருத்தினி, ந. ஜீவனதாஸ், க. நாகதீபன் மற்றும் வ. கஜமுகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற அணிக்கான சாம்பியன் கிண்ணத்தை பிரதம அதிதியின் சார்பில் அனுசியா ஜெயகாந்த் வழங்கினார். மேலும், பிற பரிசுகள் மற்றும் கிண்ணங்கள் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் வழங்கப்பட்டன.