கால்நடை திருட்டில் ஈடுபட்ட இருவர் வேலணை மக்களால் பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவக பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த குழுவொன்று, வேலணை பகுதியில் மக்களின் விழிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (ஏப்ரல் 16) இரவு 8.00 மணியளவில் வேலணை 6ஆம் வட்டாரத்தின் சங்கத்தார்கேணி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

விபரங்களைப் பொருத்தவரை, வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ஆடுகள், சந்தேகநபராகக் கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு, வெளியூரைச் சேர்ந்த சிலரின் உதவியுடன், அந்த ஆடுகளை மகேந்திரா வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றிருந்தது.

அந்த நேரத்தில் சிலர் இச்சம்பவத்தை பார்த்து சந்தேகித்து, ஊர் முகியஸ்தர்களுக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கியதுடன், திருடர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஊர் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன், கடத்த முயற்சியிலிருந்த 6 ஆடுகள், மகேந்திரா வாகனம் மற்றும் இரண்டு சந்தேகநபர்கள் பிடிக்கப்பட்டனர். மேலும், இதில் ஈடுபட்ட இன்னும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

பிடிபட்ட இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்களுடன் கைது செய்யப்பட்ட ஆடுகள் மற்றும் வாகனம் நீதிமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீவக பகுதியில் தொடர்ந்து கால்நடை திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், இந்த வழக்கில் பொதுமக்கள் உறுதியுடன் செயல்பட்டு இருவரை கையும் களவுமாக பிடித்ததானது, எதிர்காலத்தில் இவ்வாறான திருட்டுகளை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கியுள்ளது.

Share this Article