இலங்கையில் இளம் வயதினரிடையே HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் வரையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 88 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவில் நாடளாவிய ரீதியில் 708 புதிய HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 1987 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர் சமூகத்தினரிடையே பதிவாகும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.