அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தன்னிச்சையான வருமான வரிக் கொள்கைளை நீக்கி வருமான வரிச் சட்டங்களை சாதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம், இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.
நேற்று (ஜனவரி 3) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை காரணமாக மருத்துவர்கள் வருடம் ஒன்றுக்கு இரண்டு மாத வேதனத்துக்கு அதிக தொகையை வரியாகச் செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் வரிக் கொள்கை வைத்தியத் துறையை மட்டுமல்லாது ஏனைய தொழில் துறைகளையும் பாதித்துள்ளது என்று சுட்டிக்காட்டியது.
எவரையும் பாதிக்காத வகையில் வருமான வரிக் கொள்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் வரிக் கொள்கை காரணமாக கடந்த ஆண்டு 500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தது.
எம்முடைய கோரிக்கை ஏற்று வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ். மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தது.