யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கடந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 15) பிற்பகல் 3.00.மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், யாழ் மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலவரம் தொடர்பாகவும் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை 1829 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், மழை ஆரம்பிப்பதற்கு முன்பாக டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, செப் 18- செப் 22 ஆம் திகதிகளில் பிரதேச மட்டத்தில் டெங்கு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு செப் 25- ஒக் 06 ஆம் திகதி வரை டெங்கு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிரமதானப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டன.
பிரதேச ரீதியாக கொள்கலன்களை அப்புறப்படுத்தல் , பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன், பிராந்திய தொற்று நோய் தடுப்பு அதிகாரி தாரணி குருபரன் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், வைத்தியர்கள் , பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறை சாா் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.