முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம் (ஜூன் 30) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரது நெடுந்தீவு இல்லத்தில் பெருந்திரளான மக்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.
அன்னாரின் இல்லத்தில் மத வழிபாடுகளைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது அஞ்சலி நிகழ்வினை ஆசிரியர் டேவிற்சன் தலைமையேற்று நடாத்தியிருந்ததுடன் அதன்போது நெடுந்தீவுசார் அன்பர்கள் மற்றும் ஈழ மக்கள்ஜனநாயக கட்சியின் அமைப்பாளர்கள், யாழ் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர், பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என பலரும் அஞ்சலி உரை நிகழ்த்தியிருந்தனர்.
தொடரந்து அன்னாரின் திருவுடல் நெடுந்தீவு புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின்னர் நெடுந்தீவு மத்தி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பகல் 12.15 மணியளவில் உறவுகளின் கண்ணீர் வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதி நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச மக்கள், ஏனைய தீவக மக்கள், யாழ்ப்பணம், வன்னி மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் , பிரமுகர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிலைகளில் இருந்து அமைதியான மக்கள் பணியினை அதனது சேவைக்காலத்தில் ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.