மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிலர் மத சுதந்திரம் என்ற போர்வையில் ஏனைய மதங்களை விமர்சிக்கிறார்கள். மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் ஒடுக்கவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம். எந்த மதத்தையும் இழிவுபடுத்தாத வகையில் அதற்கான சட்ட வரைவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்பொருள்கள் விவகாரத்தில் தொல்பொருள்கள் ஆணையை மீறி யாரும் செயற்பட முடியாது. தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, தற்பொழுதுள்ள தொல்பொருள்கள் கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் அல்லது சாசனத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும் பிக்குமார்கள் தொடர்பில் மகாசங்கத்தினர் செயற்பட வேண்டும்.-என்றார்.